பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா


  • நினைவில் வாழும் தமிழ் அறிஞர் திரு. கா.ம. வேங்கடராமையா அவர்கள் திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல் முதல்வராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ் சமஸ்கிருதம் மற்றும் பிறமொழிகள் ஆய்வு நிறுவனத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்திலும் தமிழ்த் தொண்டு ஆற்றியவர் ஆவார்.
  • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமையும் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழி அறிவும் நிரம்பப் பெற்றிருந்தவர்.
  • கல்வெட்டு, வரலாற்றுத் துறைகளிலும், சங்க நூல்கள், பக்தி நூல்கள், மற்றும் இலக்கண நூல்களிலும் பெரும் புலமையாளராக விளங்கிப் பல சாதனைகள் படைத்தவர். இவ்வகையில் பல நூறு  தமிழறிஞர்களை உருவாக்கிய தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்.
  • தமிழ் கற்பதைக் குறைவாகக் கருதிய மிகப்பலருக்கு நல்லறிவுரைகள் கூறித் தமிழ்க் கல்வி கற்பித்த தயவாளர் இவர். தம் மக்கள் நால்வரையும் தமிழ்ப் புலவர்கள் ஆக்கி அதனால் ஆனந்தம் அடைந்தவர். இவ்வகைக்குத் திரு.கா.ம.வே. அவர்களின் துணைவியார் திருமதி அன்னபூரணி அவர்கள் மிகவும் ஊக்கம் அளித்துதவினார்கள்.
  • தமிழின் அருமை பெருமைகளை வெளிநாட்டினரும் உணரும் வண்ணம் ஒலிபெயர்ப்பு, மொழி பெயர்ப்பு நூல்களும், மிக விரிவான தமிழகக் கையேட்டு நூலும் வெளியிட்டுத் தமிழை உயர்த்திப் பிடித்தவர்.
  • இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர்கால அரசியல் தலைவர்கள், கல்லெழுத்துக்களில் தேவார மூவர், ஆய்வுப் பேழை முதலிய 20-க்கும் மேற்பட்ட அரிய நூல்களை ஆக்கித் தந்து தமிழன்னையை அலங்கரித்தவர்.
  • தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை, அக்காலச் சமுதாய வரலாற்றுடன் ஒருசேர ஆய்ந்து முழுமையாக வெளியிட்டவர். மராட்டியர்களின் மோடி ஆவணங்கள் அனைத்தையும் பதிப்பித்தவர்.
  • திருக்குறள் உரைக்கொத்து - ஆங்கில மொழிபெயர்ப்பு - ஆராய்ச்சி உரைகளுடன் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தின் மூலம் வெளியிட்டுத் தமிழ் ஆர்வலர்களால் நன்கு அறியப்பட்டவர். திருக்குறள் ஜைனர் உரையைப் பதிப்பித்தவர்.
  • இவரது கண்டிப்பான நிர்வாகத் திறன், நேரம் தவறாமை, நல்லொழுக்கம், பக்தி, மற்றவருக்கு உதவும் பண்பு, நன்றி மறவாமை ஆகியவை இவரிடம் கற்ற பல்லாயிரம் புலவர்களிடமும் படிந்தன.
  • தெலுங்கராகப் பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழாகவே விளங்கிய இப்பெருமகனாரைத் திருப்பனந்தாள் காசித்திருமடம் ஆதரித்தது. அத்திருமடம் வாயிலாகப் பலப்பல தமிழ் நூல்கள் வெளிவர உதவிய பெருமையும் இவரைச் சார்ந்தது.
  • சிவநெறிச் செல்வர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ்மாமணி முதலிய பல பட்டங்களைச் சைவ ஆதீனங்களும், தமிழ்ச் சங்கங்களும் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தன.
மேலும் அறிந்து கொள்ள  வெப்சைட்டைப் பார்வையிடுங்கள்...


⇭⇭⇭